The Family Man 2 தொடரை உடனே நிறுத்தாவிட்டால்..! அமேசானுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை
சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள The Family Man 2 இணையத் தொடர் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.
The Family Man 2 இணையத் தொடரில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழக அரசு உட்பட பல அரசியல் கட்சிகளும் The Family Man 2 தொடரை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்து வந்தன.
ஆனால் பலத்த எதிர்ப்புகளையும் மீறி The Family Man 2 தொடர் வெளியாகியுள்ளது. தமிழர்களை தவறாக சித்தரிக்கும் நோக்கம் இல்லை என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் The Family Man 2 தொடரை உடனே நிறுத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அவர், “எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தம்ழிநாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவர் கோரிக்கை வைத்த பிறகும் இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
இத்தொடரை நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும். தி பேமிலி 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் புறக்கணிப்பை சந்திக்க நேரிடும்”என்றுள்ளார்.
