இயக்குநர் பாலா விடுதலை - எதற்கு தெரியுமா?
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் அவதூறாக சித்தரித்த வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுதலை செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இயக்குனர் பாலா நேரில் ஆஜரானதை அடுத்து நீதிபதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் ஆர்யா- விஷால் இருவரும் இணைந்து நடிக்க அவன் இவன் என்ற படத்தை இயக்கி இருந்தார் பாலா.
இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் சொரிமுத்தையனார் கோயிலை இழிவுபடுத்தி காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக சிங்கம்பட்டி ஜமீன்தார் உறவினர்கள் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் உயர்நீதிமன்றத்தில் தனக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . அதனால் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் இந்த வழக்கில் இருந்து விலக்கு பெற்றார்.
இதன்பின்னர் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று இந்த வழக்கில் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி, யார் மனதையும் புண்படுத்த வேண்டும் நோக்கில் நான் நடிக்கவில்லை. அப்படி புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னதை அடுத்து அதன் அடிப்படையில் நடிகர் ஆர்யா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இயக்குனர் பாலா தரப்பு தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தது . பாலா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உறுதியாக கூறியிருந்தார். இதை அடுத்து இயக்குனர் பாலா இன்று குற்றவியல் நீதிமன்ற நடுவர் மன்றத்தில் ஆஜரானார்.
அப்போது புனிதமிகு சொரிமுத்தையனார் கோயிலையும் , பெருமைமிகு சிங்கம்பட்டி ஜமீன்தாரையும் எந்த கெட்ட நோக்கத்திலும் சித்தரிக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார் .
பாலாவின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், பாலாவுக்கு இந்த வழக்கில் இருந்து விடுதலை அளித்து உத்தரவிட்டார்.