தைரியம் இருந்தா நேரடியா என்கிட்ட பேசுங்க - ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு
தன்னுடன் அமர்ந்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்து வருகின்றன.
இதற்கிடையில் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டில் நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் தன்னிடம் நேரடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவிடம் உக்ரைன் வீழ்ந்தால் அடுத்த இலக்கு பால்டிக் நாடுகள் (எஸ்டோனியா, லத்வியா, லிதுவேனியா) தான்.
அதிபர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தையே போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி என்பதால் அவர் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். நீங்கள் ஏன் என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என தெரியவில்லை என வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கேள்வியெழுப்பியுள்ளார்.