14 ஆண்டுகால தவிப்பில் இருக்கும் தினேஷ் கார்த்திக் - தோனி மனது வைப்பாரா?
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு 14 ஆண்டுகாலமாக மனதில் நீங்காத ஆசை ஒன்று உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அஸ்வினுக்கு முன்பு தமிழக கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்ந்தவர் தினேஷ் கார்த்திக் தோனிக்கு முன்பே இந்திய அணிக்காக விளையாடிய நிலையில் தோனியின் அசுர வளர்ச்சியால் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கால் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை.
ஆனால் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தனது திறமையையும் தினேஷ் கார்த்திக் நிரூபித்து வந்துள்ளார். இவருக்கு 14 ஆண்டுகாலமாக மனதில் நீங்காத ஆசை ஒன்று உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதாவது சென்னையில் பிறந்து வளர்ந்து தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடி கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் இதுவரை ஒரு முறை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது இல்லை. தற்போதுள்ள 10 அணிகளில் தினேஷ் கார்த்திக், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத் மற்றும் கொல்கத்தா என 6 அணிகளில் விளையாடிவிட்டார்.
ஒவ்வொரு முறையும் ஏலத்தில் சென்னை அணி தம்மை எடுக்காதா என ஏங்கி காத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஏமாற்றமே மிஞ்சும். இதனால் ஒரு முறை வெளிப்படையாகவே சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை கூறிவிட்டார்.
இதனால் வரும் மெகா ஏலத்திலாவது சென்னை அணி அவரை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தினேஷ் கார்த்திக்கின் அடிப்படை விலை ரூபாய்2 கோடியாகும். விக்கெட் கீப்பர் பிளஸ் பேட்ஸ்மேன் என்பது சிறப்பு என்றாலும் அவருக்கு வயது 36 ஆகி விட்டதால் அணியில் இடம் பிடிப்பது கஷ்டம் தான் என கூறப்படுகிறது.
சென்னை அணிக்கு வயதான வீரர்களை விரும்பி எடுப்பது பிடிக்கும் என்பதால், இம்முறை நிச்சயம் தினேஷ் கார்த்திக்கை குறிவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.