இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றார்

Ranil Wickremesinghe
By Irumporai Jul 22, 2022 06:05 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சென்று, பின்பு சிங்கப்பூருக்கு சென்றார்.

அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர்.

இந்த சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை தொடங்கியது. தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுரா குமார திஸ்சநாயகே 3 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

4 ஒட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்று கொண்ட ரணில் விக்ரமசிங்கே இன்று தனது புதிய அமைச்சரவையை அமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின்  மூத்த உறுப்பினரான தினேஷ் குணவர்தனாவை நாட்டின் புதிய பிரதமராக வர உள்ளதாக  என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றார்.

அவருக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தினேஷ் குணவர்தனா இதற்கு முன்பு வெளியுறவு மற்றும் கல்வி மந்திரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.