தனியார் சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை - 41 சவரன் நகை கொள்ளை!
திண்டுக்கல் அருகே தனியார் சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் ஜன்னலை அறுத்து ரூ. 23 லட்சம் மற்றும் 41 சவரன் தங்க நகைகளை கொள்ளயடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்த சிவக்குமார், திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார்.
இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்று, பின்னர், இரவு 8 மணிக்கு பிறகு கம்பெனியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டு கதவு திறந்து பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 23 லட்சம் ரூபாய் மற்றும் 41 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை வேறு திசையில் திருப்பி திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.