போலீசின் பாதுகாப்பில் தங்கிய மனைவி - கண்டுபிடித்து சரமாரியாக வெட்டிய கணவன்
திண்டுக்கல் மாவட்டத்தில் கணவனுக்கு பயந்து பாதுகாப்பிற்காக காப்பகத்தில் தங்கிய மனைவியை, கணவன் கண்டுபிடித்து சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த துரைப்பாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இவர்களுக்கு புவனேஸ்வரன் என்கிற குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள அத்தை வீட்டிற்குச் சென்று குழந்தையுடன் தங்கியிருக்கிறார் உமாமகேஸ்வரி.
அப்போதும் அவரை விடாத துரைப்பாண்டி அங்கே அடிக்கடி சென்று தகராறு வளர்த்து வந்திருக்கிறார். இதனால் பொறுமை இழந்த உமா மகேஸ்வரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட, அவர்கள் உமாமகேஸ்வரியையும் அவரது குழந்தையையும் பாதுகாப்பாக கொண்டு காப்பகத்தில் தங்க வைத்திருக்கின்றனர்.
இதை அறிந்த துரைப்பாண்டி காப்பகத்திற்குள்ளும் புகுந்து, உமா மகேஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த உமாமகேஸ்வரியை காப்பக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . இதையடுத்து தப்பி ஓடிய துரை பாண்டியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அத்தை வீட்டில் இருந்தால் கணவனிடமிருந்து பிரச்சனை வருகிறது என்பதற்காகத் தான் காப்பகத்திற்கு சென்றிருக்கிறார்.
ஆனால் அங்கேயும் பாதுகாத்துகொள்ள முடியாமல் கணவனால் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் கிடப்பதை நினைத்து அவரது உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.