திண்டுக்கலில் ஃபேமஸ்.. எல்லாருக்கும் தெரியும், அது உருவான கதை தெரியுமா? - சிலிர்க்கவைக்கும் வரலாறு!
தென் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டமான திண்டுக்கல்லின் வரலாறு பற்றி பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம்
'திண்டு' அதாவது 'தலையணை' போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும், மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் 'திண்டு', 'கல்' ஆகிய இரண்டு சொற்கள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டதிலிருந்து 15.9.1985 அன்று உருவானது. முதல் மாவட்ட கலெக்டர் திரு.எம்.மாதவன் நம்பியார், I.A.S.
திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.
புகழ்பெற்ற முஸ்லீம் மன்னர் திப்புசுல்தானின் ஆட்சியில் இருந்த திண்டுக்கல், ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் வரலாற்று புகழ்பெற்ற மலைக்கோட்டை நாயக் மன்னர் முத்துக்கிருஷ்நப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது.
வரலாறு
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. அந்த சமயத்தில் திண்டுக்கல் சிறந்த வணிக தளமாக இருந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. மதுரை நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது.
இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.
இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்றாகும். 1788-ல் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் திண்டுக்கலின் மன்னரானார். அதன்பிறகு திண்டுக்கலை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரையில் ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர்.
மலைக்கோட்டை
ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை சீமையிலிருந்து அரசி வேலு நாச்சியாரின் தளபதிகளான மருதுபாண்டியர்கள் ஹைதர் அலியின் அனுமதி பெற்று மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர். இக்கோட்டையில், தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது.
பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர் அலி போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார்.
கி.பி. 1784-இல் திப்பு சுல்தான் இங்கு வந்துள்ளார். கி.பி. 1788-இல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். மேலும், பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன.
பொருளாதாரம்
திண்டுக்கல் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. இந்த மாவட்டம் நெல், கரும்பு, பருத்தி மற்றும் பிற பயிர்களுக்கு பெயர் பெற்றது. இம்மாவட்டம் இயற்கை வேளாண்மையின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, மேலும் பல விவசாயிகள் பாரம்பரிய சாகுபடி முறைகளைப் பின்பற்றுகின்றனர்.
மாவட்டத்தில் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. சமீப ஆண்டுகளில், மாவட்டத்தில் சிறுதொழில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி, கைத்தறி நெசவு, மட்பாண்டங்கள் மற்றும் மர செதுக்குதல் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையிலான சிறிய அளவிலான அலகுகள் உள்ளன. இந்தத் தொழில்கள் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன.
திண்டுக்கல் பூட்டு
திண்டுக்கல் மாவட்டம் பூட்டு தயாரிப்புக்குப் பெயர் போன ஊராகும். இம்மாவட்டத்தில் யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, நல்லாம்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சங்கரலிங்க ஆசாரிக்கு 300 கிலோ மீட்டர் தாண்டியிருந்த தூத்துக்குடியில் தான் பெண் கிடைத்தது. சங்கரலிங்கத்தின் மாமனார் குடும்பத்தினர் பூட்டு செய்யும் தொதொழில் செய்தனர்.
சங்கரலிங்க ஆசாரி தூத்துக்குடியில் பூட்டு செய்யும் வழிமுறைகளை கற்றார். 1930-ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து திண்டுக்கல் வந்த சங்கரலிங்க ஆசாரி சிறிய அளவில் பூட்டு செய்ய தொடங்கினார். முதலில் மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டும், மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு ஒன்றையும் செய்தாராம். இப்படி இரண்டு வகையான பூட்டுகளைத் உருவாக்கிய அந்த ஆசாரி, அதனை விற்பனைக்காக அருகில் உள்ள கடைகயில் கொடுத்திருந்தார்.
அதன் விற்பனை நன்றாக இருந்தது மற்றும் அதன் தேவைகள் அதிகமாக இருந்தது. இதனால் கடைக்காரர்கள் ஆசாரியைத் தேடி வந்து பாராட்டியதோடு இல்லாமல், இதேபோல இன்னும் அதிகமன அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆசாரி அதிக ஈடுபாட்டுடன், வழக்கமான ஒன்றாக இல்லாமல், அழகிய கற்பனைத்திறனோடும், அதிக நாட்கள் நீடித்து உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துக் கூட திறக்க முடியாத அமைப்போடும் பூட்டுகளைத் தயாரிக்க வியாபாரம் சூடுபிடித்தது. மேலும், பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிக அளவில் கிடைப்பதால் திண்டுக்கல்லில் பூட்டு தொழில் வளர்ச்சியடைந்து பின்னாளில் பிரபலமானது.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
1952 ஆம் ஆண்டு பி. நாகசாமி நாயுடு என்பவர் “ஆனந்த விலாஸ்” பிரியாணி, சப்பாத்தி ஹோட்டல் என்ற பெயரில் திண்டுக்கல்லில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார். அவருடைய அனுபவமின்மையால் உணவகம் பொருளாதார இழப்புக்குள்ளானது. இதனால் உணவகம் மூடப்பட்டது. உணவகத் தொழில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தார். அவரே அடிக்கடி பிரியாணி செய்து பார்த்தார்.
இதில் அவருக்கு திருப்தி ஏற்பட மீண்டும் 1957 ஆம் ஆண்டு அதே பெயரில் உணவகத்தைத் திறந்தார். சமையல் பணியை அவரே செய்தார். அவரே சமைத்து, ருசி பார்த்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார். ஒரு கட்டத்தில் பிரியாணியின் சுவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற அந்த நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார்.
இவர் சமையல் பணியில் இருக்கும் போது, அவருடைய வழுக்கைத் தலையை மறைப்பதற்காக தலைப்பாகை கட்டிக் கொள்வார். அதே தலைப்பாகையுடன் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவார். எப்போதும் தலைப்பாகையுடன் இருந்த அவரை தலப்பாகட்டு நாயுடு என்று அழைக்கத் தொடங்கினர். இன்று அதுவே தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி கடை என்று அழைக்கப்பட்டு, பின்னர் தலப்பா கட்டி பிரியாணி கடையாகி விட்டது.
பழனி முருகன் கோவில்
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.
குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.
கொடைக்கானல்
1821 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் பி. எஸ். வார்டு, என்ற பிரித்தானிய நில அலவையாளர், கொடைக்கானலுக்கு வருகை தந்த முதலாவது ஐரோப்பியராவார். 1834 ஆம் ஆண்டில், மதுரை ஆட்சியர் தேவதானப்பட்டியிலிருந்து ஏறி, கொடைக்கானலில் ஒரு சிறிய பங்களாவைக் கட்டினார். 1863 ஆம் ஆண்டில், மதுரை ஆட்சியர் சர் வேர் ஹெண்டி லீவினி, கொடைக்கானலில் ஏரி ஒன்றை 60 ஏக்கர் நிலத்தில் உருவாக்கினார்.
இதற்காக இப்பகுதியில் ஓடிய நீரோடைகளை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரியாக மாற்றினார். அவர் துாத்துக்குடியிலிருந்து இந்த ஏரியில் சவாரி செய்வதற்கான முதல் படகுகளையும் கொண்டு வந்தார். 1890 ஆம் ஆண்டில் கொடைக்கானலில் படகு மன்றம் ஒன்று அமைக்கப்பட்டது.
நவீன கால கொடைக்கானலானது அமெரிக்க சமய பரப்புக்குழுவினர்களால், சமவெளிப் பகுதிகளில் உள்ள உயர் வெப்பநிலையிலிருந்தும், அயனமண்டல நோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு 1845 ஆம் ஆண்டு ஒரு மலை வாழிடமாக உருவாக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் ஒரு சில உயர்குடி இந்தியர்கள் இந்த இடத்தின் அழகான இயற்கையை இரசிக்க வந்தனர். அவர்கள் இந்த இடத்தை மறுசீரமைப்பு செய்தனர். கொடைக்கானல் சில நேரங்களில் மலை வாழிடங்களின் இளவரசி என அழைக்கப்படுகிறது