திண்டுக்கல்லில் பீஸ் கட்டாததால் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கிய தனியார் பள்ளி..!
திண்டுக்கல்லில் கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்தால் ஐந்தாம் வகுப்பு பயிலும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளி நிர்வாகம் நீக்கியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நத்தம் சாலையில் இயங்கிவரும் செளந்தரராஜா வித்யாலயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் முதல் பருவத்துக்கான முழு கல்வித்தொகையை செலுத்த வேண்டுமென பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
முழு ஊரடங்கால் வேலை இழந்த பல பெற்றோர்கள், கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம், ஐந்தாம் வகுப்பு பயிலும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளது.
இதேபோல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை என பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் நிலையில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.