ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கான ஆளுநர்தானே.. பாகிஸ்தானில் உள்ள ஆள் இல்லையே - சபாநாயகர் அப்பாவு!
ஆர் என் ரவி அவர்கள் தமிழ்நாட்டிற்கான ஆளுநர்தானே.பாகிஸ்தான் சீனாவில் உள்ள ஆள் இல்லையே என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர்
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . அந்த வகையில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் ,அலுவலகங்கள் , பள்ளிகள் , உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றி,போட்டிகள் நடத்தப்பட்டது.
அதன் பிறகு கோயில்களில் அரசு சார்பில் சமத்துவ விருந்து பரிமாறப்பட்டது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ விருந்து உண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "ஆளுநர் என்ன நோக்கத்தால் திராவிடம் குறித்து பேசினார் என்று தெரியவில்லை. பெரும்பாலும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. திராவிட சித்தாந்தம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். இதை தான் திமுக அரசு செய்து வருகிறது.
ஆளுநர்தானே..
மாநிலத்தில் உள்ள சாமானியர்களுக்கும் வேலை; எளிய மக்களுக்கு உதவ வேண்டும். எல்லா மக்களுக்கும் சமமான உதவியை செய்வது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ,ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதில் தவறு ஒன்றும் இல்லை.
தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளதே தவிர மோதல் போக்கை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது என்று கூறினார்.மேலும் ஆர் என் ரவி அவர்கள் தமிழ்நாட்டிற்கான ஆளுநர்தானே. பாகிஸ்தான் சீனாவில் உள்ள ஆள் இல்லையே!" என்றார்.
அதனால் தான் முதல்வர் அவர்கள் தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறார். முடிந்தால் நான் கூட கலந்து கொள்வேன், அதில் ஒன்றும் தவறில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
முன்னதாக சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் 1947-ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன.அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று. முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தது என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.