கலப்பட டீசல் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை
கலப்பட டீசல் விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.
இதனால் இது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை சுற்றுவட்டார பகுதிகளான சேலம், சங்ககிரி ,நாமக்கல், திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் ஆய்வுத் துறை சார்பாக பல குழுக்களாக பிரிந்து வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் விற்பனை சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 400 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 டேங்கர் லாரிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த 13ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி, பொள்ளாச்சி, கேஜி சாவடி எட்டிமடை ஆகிய இடங்களில் நடத்திய வாகன சோதனையில் 4000 மீட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது,.
அதேபோல் சேலம் கேது நாயக்கன்பட்டியில் நடத்திய ஆய்வில் கடந்த ஐந்தாம் தேதி ஆயிரத்து 350 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல், சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலப்பட டீசல் விற்பனை என்பது அதிகரித்து வருகிறது.
இதனால் கலப்பட டீசலை டேங்கில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என தெரிவித்துள்ளது.