அதானியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது இதுதான்!
அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதானி
பிரபல தொழிலதிபர் கெளதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடாக பெற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, முதல்வர் ஸ்டாலினும் கோபப்பட்டு பதிலளித்தார்.
செந்தில் பாலாஜி
இந்த நிலையில் இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது, தொழிலதிபர் அதானியை முதல்வர் சந்திக்கவும் இல்லை.
அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சீர்குலைந்து போன மின்சார வாரியத்தை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி, அடிப்படை உண்மை இல்லாத பொய்க்குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடல்ல. என்று தெரிவித்துள்ளார்.