ஓசி டிக்கெட் வேண்டாம் என்று சொன்ன மூதாட்டி விவகாரத்தில் பின் வாங்கியதா காவல்துறை - நடந்தது என்ன?
ஓசி டிக்கெட் வேண்டாம் என்று கூறிய மூதாட்டி மீது வழக்குப்பதிவு என்று செய்திகள் வெளியான நிலையில் அப்படி ஏதும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று எஸ்.பி அளித்துள்ள பேட்டி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் மகளிர் அனைவரும் உள்ளூர் நகரப் சாதாரண பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவித்து மகளிரை திக்குமுக்காட செய்தார்.
அவரின் இந்த அறிவிப்புகள் கல்லுாரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், மூதாட்டிகள் என அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்று கூட சொல்லலாம்.அந்த வகையில் சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சரின் பேச்சும் - கண்டனமும்
இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் மகளிர் அனைவரும் ஓசி பஸ்சில் போவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆளும் கட்சியை குறை சொல்ல காரணம் கிடைக்காத என்று தேடிக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு அமிர்தம் போல் அமைந்தது இவரின் ஓசி டிக்கெட் பேச்சு.
இதற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
வைரலான மூதாட்டியின் வீடியோ
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு அரசு நகரப் பேருந்து ஒன்று சென்றது.
இப்பேருந்தில் வினித் என்பவர் அன்று நடத்துநராக பணியில் இருந்துள்ளார். அப்போது மதுக்கரை மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் துளசியம்மாள் என்ற மூதாட்டி ஏறினார்.
மூதாட்டியிடம் நடத்துனர் டிக்கெட்டை கொடுத்துள்ளார். அப்போது மூதாட் நான் ஓசியில் வர மாட்டேன் எனக் கூறி இலவச டிக்கெட்டை வாங்க மறுத்து பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலானது. இந்த வீடியோக்கள் அதிமுகவினரால் வேண்டுமென்ற எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டதாக திமுக ஐடிவிங்கைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் ட்வீட் செய்திருந்தார்.
பின் வாங்கியதா காவல்துறை?
இதனிடையே மதுக்கரை காவல் நிலையத்தில் நகர செயலாளர் ராமு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் மூதாட்டி துளசியம்மாளை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்ற பேருந்தில் சண்டை போட வைத்து வீடியோ எடுத்ததாகவும் திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வீடியோ எடுத்து அவதுாறு பரப்பி வருகின்றனர் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் தெரிவித்திருந்தார்.
திமுக நகர செயலாளர் ராமு அளித்த புகாரின் பேரில் மூதாட்டி துளசியம்மாள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக வெளியாக செய்திகள் சோஷியல் மீடியாக்களில் தீ போல பரவியது.
இந்த நிலையில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தீடீரென செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்கு ஏதும் பதியவில்லை அவரை தவிர மற்ற 3 பேர் மீது தான் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
மூதாட்டி சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். என்று விளக்கம் அளித்தார்.
அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்குப்பதியாமல் சாட்சியாக சேர்த்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.