போலீசை பார்த்ததும் காரை வெடிக்க வைத்தாரா முபின்? வெளியான திடுக்கிடும் தகவல்
போலீசாரை பார்த்ததும் காரை ஜமேசா முபின் வெடிக்க வைத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கார் வெடித்த சம்பவம்
கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று வெடித்து சிதறியது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி பலியானார். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்.
வீ்ட்டில் வெடிபொருட்கள் அடங்கிய மூலப் பொருட்கள்
இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கமிஷ்னர் சுதாகர் மற்றும் ஐஜி செந்தாமரை கண்ணன், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் கார் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இச்சம்பவம் பற்றி விசாரிக்க 6 தனிப்படைகளை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டை சோதனை செய்த காவல்துறையில் வீட்டில் சில ரசாயன வெடிபொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிக்குண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கோவையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியான அதிர்ச்சி தகவல்
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இச்சம்பவம் பற்றி கூறியதாக பிரபல தமிழ் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில் ஜமேஷா முபின் காரில் வெடிகுண்டுகளுடன் வருவது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் அவர் வந்த காரை தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்த பிறகு காரை வெடிக்க செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விஷயங்களை முன்கூட்டியே தெரிவித்தால் அது விசாரணைக்கு ஏதுவாக இருக்காது குற்றவாளிகள் உஷார் ஆகிவிடுவார்கள் என்று தமிழக அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூடும் இடங்களில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற இருந்ததும் அது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் தடுக்க முயன்ற போது தான் ஜமேஷா முபின் காரை வெடிக்கச் செய்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினரோடு தொடர்பு இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜமேஷா முபின் தான் இறப்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்-ல் வைத்துள்ளார்.
மேலும் விசாரணையில் பலர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.