‘அதிகமாக கூடிய கூட்டம், அரங்கத்தில் ஏசி கோளாறு’ - பாடகர் மரணத்தில் திடுக்கிடும் தகவல்!
பிரபல பாடகரான கிருஷ்ண்க்குமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கேகே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்திருந்தார்.
53 வயதான பாடகர் கேகே தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டும் இவர் 66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அதில் காதல் வளர்த்தேன், அப்படி போடு, காதலிக்கும் ஆசை இல்லை, நினைத்து நினைத்து பார்த்தேன், உயிரின் உயிரே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, உள்ளிட்ட பாடல்களும் அடங்கும்.
இந்நிலையில் இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், கேகேவின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில் இவரது மரணத்திற்கு அரங்கத்தில் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழிந்த கூட்ட நெரிசல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பாடகர் கேகேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற நிலையில் அங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது.
இதனால் தீயை அணிக்க பயன்படுத்தப்படும் தீயணைப்பானை கொண்டு அதிகளவில் கூடிய கூட்டத்தை களைக்க முற்பட்டப்போது அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது.
அரங்கத்தில் உள்ள ஏசியும் வேலை செய்யாததால் கேகே-வுக்கு அசௌகிரியம் ஏற்பட்டகாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, பாடகர் கேகேவின் எதிர்பாராத மறைவு தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.