மீண்டும் தூசி தட்டப்படும் சேகர் ரெட்டி 'டைரி' விவகாரம்; ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை சம்மன்

EPS OPS Notice Diary Sehgar Reddy
By Thahir Sep 22, 2021 10:24 AM GMT
Report

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோரின் வீடுகளில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மீண்டும் தூசி தட்டப்படும் சேகர் ரெட்டி

சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.147 கோடி பணத்தில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும். அதைத் தொடர்ந்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாகப் பதுக்கியதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்தன.

சேகர் ரெட்டி மீது சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளும் ஆதாரங்கள் இல்லை என முடித்து வைக்கப்பட்டன. இதற்கிடையே, சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ஒரு டைரி கைப்பற்றப்பட்டது.

அந்த டைரியில் முன்னாள் முதல்வர்கள் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் உட்பட 12 பேரின் பெயர்கள் இருப்பதாவும் கூறப்படுகிறது.

இவர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பான விவரங்களும் அந்த டைரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த டைரியில் உள்ள பெயர்களை ஆதாரமாக வைத்து முன்னாள் முதல்வர்கள் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கும் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுகவில் இருந்து வெளியேறி தற்போது திமுகவில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இவர்களின் பெயர்கள் டைரியில் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு, சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.