சர்க்கரை நோயிலிருந்து விடுபட வேண்டுமா...? - அப்போ இந்த ஆசனத்தை செய்யுங்கள்... - Dr.கிருஷ்ண பாலாஜி பேட்டி...!
சர்க்கரை நோயிலிருந்து விடுபட சில ஆசன பயிற்சிகளை Dr.கிருஷ்ண பாலாஜி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
யோகாசனத்தின் சிறப்பு
நலம் என்பது உடலும் அமைதியாக இருக்க வேண்டும். உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டும். இந்த இரண்டையும் கொடுக்கக்கூடியதுதான் யோகா. ஏற்கெனவே நாம் யோகாசனம் செய்துதான் இந்த பூமிக்கு வந்திருக்கிறோம்.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து நாம் வெளியே வரும்போது முதலில் தலை வரும் பிறகு கால் வரும். அது சிரசாசனம். நாம் சிரசாசனம் செய்துதான் பூமிக்கு வந்திருக்கிறோம். குழந்தை படுத்தவுடன் கை, காலை அசைத்துக்கொண்டு இருக்கும். அது அர்த்தஹாலாசனம். பிறகு குழந்தை குப்புற படுத்துக்கொண்டு 2 கைகளை ஊன்றிக்கொண்டு தலையை மேலே பார்க்கும். அது புஜங்காசனம். பிறகு குழந்தை எழுந்து நிற்கும். கீழே குனிந்து தன் காலை தொடும். அது பாதஹஸ்தாசனம்.
நாம் குழந்தையாக இருக்கும்போது யோகாசனம் செய்து நலமாக இருந்தோம். ஆனால், வளர்ந்து வர, வர நாம் அந்த யோகாசன பயிற்சிகளை மறந்து விடுகிறோம். யோகாசனம் உடல் உள் உறுப்புக்களை திடப்படுத்தும். நாளமில்லா சுரமிகளை நன்றாக இயங்கச் செய்யும். மனதிற்கு ஒரு அமைதியை கொடுக்கும். தெளிந்த சிந்தனையை கொடுக்கும்.
மன அழுத்தத்தை நீக்கக்கூடியது. மனிதன் 120 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். ஆனந்தமாக வாழலாம். அர்த்தஹாலாசனம் பயன்கள் இந்த அர்த்தஹாலாசனம் செய்யும்போது, கல்லீரல் நன்றாக இயங்கும்.
நுரையீரல் நன்றாக இயங்கும். சர்க்கரை நோய் வராமல் நன்றாக வாழலாம். வாயு பிரச்சினை இருப்பவர்கள் இந்த அர்த்தஹாலாசனம் செய்தால் அதிலிருந்து விடுபட்டுவிடலாம். முதுகு தண்டு திடமாக இருக்கும். அடி முதுகுவலி வராது. சிறுநீரகம், சிறுநீரக பை நன்றாக இயங்கும்.
ஆசனம் செய்ய வேண்டிய நேரம்
இந்த ஆசனத்தை காலை, மாலை இருவேளை செய்யலாம். காலையில் 4 மணி முதல் 7 மணிக்குள் செய்யலாம். அதேபோல் மாலை 4 மணி முதல் 7 மணிக்குள் செய்யலாம். ஆசனம் செய்யும்போது படுத்து நிதானமாக செய்ய வேண்டும். ஒரு ஆசனத்திற்கு 10 வினாடிகள் போதும். முழுமையான பலன் கிடைக்கும்.
ஒரு ஆசனம் செய்து முடித்தவுடன் ஒரு சாந்தி ஆசனம் செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் கழுவி, காலைக்கடனை முடித்துவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை கிழக்கு முகமாக, மாலை மேற்கு முகமாக பயிற்சி செய்ய வேண்டும்.
சுகாசனம் நிலை
அர்த்தஹாலாசனம் செய்யும்போது நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இது சுகாசன நிலை. கண்களை மூடி இயல்பாக நடக்ககூடிய மூச்சில் ஒரு வினாடிகள் கவனம் செலுத்த வேண்டும். யோகாசனத்தை மனம் ஒருநிலைப்பாட்டோடு செய்யும்போது பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
அர்த்தஹாலாசனம் செய்யும் முறை
முதல் நிலை
* நேராக படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும், பக்கவாட்டில் வைத்துக் கொண்டு கை விரல் பூமியை நோக்கி இருக்க வேண்டும். இந்த கைகளில்தான் ராஜா உறுப்புகளுடைய புள்ளிகள் இருக்கின்றன.
* இந்த இரு கைகளையும் பக்கவாட்டில் அழுத்திக்கொண்டு ஒரு காலை மேலே உயர்த்தி நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். 1 லிருந்து 10 வரை எண்ணிவிட்டு மெதுவாக மூச்சை இறக்கிக்கொண்டே காலை கீழே வைத்துவிடுங்கள்.
2ம் நிலை
* மீண்டும் இன்னொரு காலை மேலே உயர்த்தி 1 லிருந்து 10 வரை எண்ணிவிட்டு மெதுவாக மூச்சை இறக்கிக்கொண்டே காலை கீழே வைத்துவிடுங்கள்.
3ம் நிலை
* அடுத்து இரு கைகளை பக்கவாட்டில் தரையை பார்த்து அழுத்துக்கொண்டு, இரண்டு காலை மேலே உயர்த்தி 1லிருந்து 10 வரை எண்ணிவிட்டு கீழே மெதுவாக இறக்கிக்கொண்டே மூச்சி இறக்கி விடுங்கள்.
இந்த யோகாசனம் செய்தால் நிச்சயம் சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டு விடலாம்.