3 நாட்களில் பிறந்தநாள்; 'தூம்' பட இயக்குநர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார்.
சஞ்சய் காத்வி
'தேரே லியே' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் சஞ்சய் காத்வி. இதனை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரை வைத்து 'தூம' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷனை வைத்து இயக்கிய ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார். மேலும், அஜாப் கசாப் லவ், ஆப்பரேஷன் பரிண்டெய் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் 56 வயதாகும் சஞ்சய் காத்வி இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். சஞ்சய் காத்விக்கு ஜினா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது மகள் சஞ்சினா, அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவரது உடலில் எந்த பிரச்சினைகளும் இதற்கு முன்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் காத்விக்கு இன்னும் மூன்று நாட்களில் (நவம்பர் 22) பிறந்தநாள் வரும் நிலையில், அவர் மரணம் அடைந்தது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.