சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தல தோனி விலகல்; புதிய கேப்டனாகிறார் ‘ஜட்டு’
சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.
ஐபிஎல் 15-வது சீசன் நாளை மறுநாள் மும்பையில் தொடங்குகிறது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகாலம் சென்னை அணியை வழிநடத்தி வந்த தல தோனி தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
அவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான தோனி அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறி தான். இந்நிலையில், அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் ஜடேஜாவை தான் கேப்டனாக நியமிப்பார்.
ஆனால் அப்பொழுது அவருடன் களத்தில் இருந்து உதவ தோனி இருக்க மாட்டார். இந்த காரணத்தினால் தான் ஜடேஜாவை கேப்டனாக தயார் படுத்த தோனி தற்போதே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் மூலம் நெருக்கடியான சமயத்தில் அணியை எப்படி வழிநடத்த வேண்டும், ஃபீல்டர்களை எப்படி நிறுத்த வேண்டும் போன்ற யுத்திகளை ஜடேஜாவுக்கு நடப்பு சீசனிலேயே களத்தில் தோனி கற்றுக்கொடுத்துவிடுவார்.
மேலும் ஜடேஜாவுக்கும், கடந்த 13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் நன்கு இருக்கிறது. அவர் ஒரு பந்துவீச்சாளர் என்பதால் பேட்ஸ்மேனை அவுட்டாக்க எப்படி ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும் என்று நன்கு தெரியும்.
பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கலக்கி வரும் ஜடேஜாவுக்கு தற்போதைய கேப்டன் பொறுப்பு கௌரவத்தையும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தையிம் நிச்சயம் தரும்.
என்னதான் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அந்த பொறுப்பு தகுதி மிக்க ஒரு வீரரிடம் சென்றுள்ளது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. எனினும் ஜட்டுவின் கேப்டன்சி செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் களத்தில் பார்க்கவேண்டும்.