தோனியின் மாஸ்டர் பிளானை சுக்குநூறாக்கிய பிசிசிஐ - ஐபிஎல் தொடர் அவ்வளவுதானா?
ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ அறிவித்துள்ள அறிவிப்பு ஒன்று தோனி போட்ட திட்டத்தை முற்றிலும் சுக்குநூறாக்கியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.குரூப் ஏ பிரிவில் மும்பை,கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
கொரோனா காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை, புனே நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குள் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் பயோ பபுளுக்கு கொண்டு செல்லும் வகையில் வீரர்களுடன் ஆஜராக வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில் அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்களும், இந்திய வீரர்களுக்கு 3 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இந்த காலக்கட்டத்தில் எடுக்கப்படும் 3 கொரோனா பரிசோதனையிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் அணிகள் பயிற்சியை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சென்னை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. காரணம் வழக்கம்போல முதலில் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி இம்முறை சூரத்தில் முகாமிட்டுள்ளது. மும்பையில் உள்ள பிட்ச்-ம், சூரத்தில் உள்ள பிட்ச்-ம் கிட்டத்தட்ட 75% ஒரே மாதிரியானவை என்பதால் சென்னை அணி வீரர்கள் 20 பேர் அங்கு பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் தற்போது அனைவரையும் மும்பை வருமாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது சென்னை வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.