ஐபிஎல் தொடரில் தோனி செய்த மகத்தான சாதனைகள் என்னென்ன தெரியுமா?
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகியுள்ள நிலையில் அவர் செய்த மகத்தான சாதனைகள் குறித்து காண்போம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முதலில் பிசிசிஐ இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. புதிய அனுபவம், வீரர்கள் அணி மாறி கலந்து விளையாடிய புதிய தருணம் என ஐபிஎல் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் பங்கேற்றது. இந்த முதல் தொடரில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை 12 சீசன்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தார். இடைப்பட்ட 2 ஆண்டுகள் சூதாட்டப் புகாரில் சென்னை அணி தடை செய்யப்பட்டதால் புனே அணிக்கு தலைமை தாங்கினார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியது கேப்டனை மாற்றாத ஒரே அணி எதுவென்றால் அது சென்னை மட்டும் தான். நடப்பு தொடரிலும் தோனியே கேப்டனாக இருப்பார் என கருதப்பட்ட நிலையில் அணியின் நிலை கருதி ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே எனும் ஐபிஎல் அணியின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க தோனி பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை.
இவரது தலைமையின் கீழ் சென்னை அணி 9 முறை இறுதிபோட்டிக்குள் சென்று அதில் 2010, 2011, 2018, மற்றும் 2021 ஆகிய 4 சீசனில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதேபோல் 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் பட்டம், 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது என கணக்கிட்டால் மொத்தம் 7 டி20 சாம்பியன் கோப்பைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
மொத்தம் தோனி இதுவரை 204 போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 121 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 82 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. மேலும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.
இனி தோனியின் கேப்டன்சியை பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.