ஜெர்சி எண்ணாக 7-ஐ தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம் - ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த தல தோனி
7-ம் நம்பரை ஜெர்சி எண்ணாக தேர்ந்தெடுத்ததில் மூடநம்பிக்கை எதுவும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்திலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அபாரமான பங்களிப்பை தோனி வழங்கியுள்ளார்.
ஐபிஎல்-லிலும் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தொடங்கி, ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை தல தோனியின் ஜெர்சி எண் 7-ஆக தான் இருந்துள்ளது.
அது தோனிக்கு ராசியான எண் என இதுனால் வரை கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்த ரசிகர்களுடனான மெய்நிகர் (வெர்சுவல்) உரையாடலில் கலந்துகொண்ட தோனி, இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
அதன்படி, தான் ஏழாவது மாதம் (ஜூலை) 7-ம் தேதி பிறந்ததால், 7-ஐ தேர்வு செய்தேன் என தோனி கூறினார்.
இது ராசியானது என பலர் கூறுகின்றனர், ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் தனக்கு இல்லை எனவும் இந்த எண் தனது இதயத்துக்கு நெருக்கமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.