ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது? - தோனி சொன்ன முக்கிய தகவல்

Ipl2021 MSDhoni Chennai super kings
By Petchi Avudaiappan Oct 06, 2021 12:24 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதை தோனியே உறுதி செய்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றின் அசைக்க முடியாத நாயகனாக திகழ்ந்து வரும் தோனி சென்னை அணிக்காக இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

அந்த அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருவதற்கு முக்கியமான காரணம் தோனி என்ற ஒருவர் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. ஆனால் வயது காரணமாக பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதன் காரணமாகவும் தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்றே பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

 இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உள்பட மூன்று சென்னை வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை ரசிகர்கள் பலரின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர், தோனியிடம் நீங்கள் ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினத்தன்று) ஓய்வை அறிவித்தது ஏன்? அதற்கு காரணம் எதுவும் உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் பேர்வெல் போட்டி எதிலும் பங்கேற்பீர்களா என்ற கேள்வியையும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த தோனி, “ஆகஸ்ட் 15ம் தேதியை விட சிறந்த நாள் வேறு எதுவும் இருக்க முடியாது. எனது கடைசி போட்டியை (farewell) பொறுத்தவரையில் நீங்கள் சென்னை அணியில் தொடர்ந்து என்னை பார்க்கலாம். சென்னை அணிக்காகவே எனது கடைசி போட்டியும் இருக்கும். அதுவும் சென்னை மண்ணில் எனது ரசிகர்கள் முன்னிலையில் தான் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என நினைத்துள்ளேன், அது நடக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தோனியின் இந்த வார்த்தைகள் அவர் இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற மாட்டார் என்பதை உறுதி செய்துள்ளது.