ரோகித் சர்மாவின் வளர்ச்சி - தோனியே காரணம்...கம்பீர் புகழாரம்..!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தற்போதைய வெற்றிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியே காரணம் என கம்பீர் புகழாரம் சுட்டியுள்ளார்.
10000 ரன்களை கடந்த ரோகித்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன் மீது தொடர்ந்து வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பேட்டிங் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் நேபாள, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக தொடர்ந்து அரை சதங்கள் அடித்து அசத்தியிருக்கும் ரோகித் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மற்றொரு மைல்கல்லை அடைந்தார்.
இலங்கை அணிக்கு எதிராக 22 ரன்களை அவர் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை ரோகித் சர்மா கடந்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில் சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, விராட் ஆகியோரை அடுத்து 10000 ரன்களை அடித்த வீரராக ரோகித் முன்னேறியுள்ளார்.
தோனி தான் காரணம்
அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, தோனியால் தான் இன்று ரோகித் சர்மா ரோகித் சர்மாவாக உள்ளார் என புகழாரம் சுட்டி, ரோகித்தின் கேரியரில் இந்த திருப்புமுனை ஒரே ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியமானது என தோனிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ரோகித் வாழ்க்கையின் கடினமான நேரத்தில் டோனி அவரை ஆதரித்தார் என குறிப்பிட்ட கம்பீர், 2013 சாம்பியன்ஸ் டிராபியில் மிடில் ஆர்டர் பேட்டராக இருந்து ரோகித்தை தொடக்க ஆட்டக்காரராக மாற்றி அவரது வாழக்கையில் மிக பெரிய திருப்புமுனையை தோனி தான் செய்தார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.