மும்பை அணியின் காலை வாரிவிட்ட உனட்கட் - தோனிக்கு மட்டும் அப்படி செய்தது ஏன்?
ஐபிஎல் தொடரில் மும்பை அணி வீரர் உனட்கட் செய்த செயல் ரசிகர்களிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நவிமும்பையில் நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இதில் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உனட்கட் அந்த ஓவரை வீசினார். இதில் தோனி ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி அடித்து கடைசி பந்தில் அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் மும்பை அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய மேட்சை கோட்டை விட்டது. எனவே உனட்கட்டை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான குரலும் எழுந்துள்ளது. ஆனால் உனட்கட்டின் உண்மையான முகமே வேறு என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு காரணம் இவர் 2017ஆம் ஆண்டு புனே அணிக்காக தோனியுடன் விளையாடினார். கொயங்காவின் சகோதரருடன் ஏற்பட்ட மோதலால் தோனி அந்த சீசனில் கேப்டனாக இல்லாமல் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். எனினும் எப்போதும் போல் மற்ற வீரர்களுக்கு தோனி பந்துவீச அறிவுரை வழங்கினார். ஹைதராபாத் அணிக்கு எதிரான 44வது லீக் ஆட்டத்தில் புனே அணி 148 ரன்களை தான் எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இதே உனட்கட் தான் வீசினார். முதல் பந்து டாட் பால்.அடுத்த 3 பந்தில் ஹாட்ரிக் விக்கெட், கடைசி 2 பந்தும் டாட் பால் என அந்த மேட்சில் வேற லெவல் பெர்பார்மன்ஸ் காட்டியிருப்பார்.
இதேபோல் ரஞ்சி கோப்பையில் சௌராஸ்டிரா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று தந்த முதல் கேப்டன் உனட்கட் ஆவார்.அப்படிப்பட்ட இவரா மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் நம்பிக்கையை பொய்யாக்கியவர் என்றால் யாராலும் நம்ப முடியவில்லை.