“தோனி எங்களுக்கு மட்டும் தான்” - ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சென்னை அணி நிர்வாகம்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணி தக்க வைத்துக்கொள்ளும் முதல் வீரராக தோனி இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற நடப்பு 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இதனிடையே தோனிக்கு 40 வயது ஆகிவிட்டதாலும், விரைவில் கூடுதலாக 2 அணிகளுடன் மிகப்பெரிய அளவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையிலும் சென்னை அணியில் தோனி தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம் தான் ஓய்வு பெறும் போட்டி சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின்னர் பேசிய தோனி சென்னை அணியில் தான் தொடர்வதாக தெரிவித்தார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அணிகள் தங்கள் தற்போதைய வீரர்கள் எத்தனை பேரை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை என்றும் ஆனால் கப்பலின் மாலுமியையே முதல் ஆளாக தாங்கள் தக்க வைக்க விரும்புவதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை அணியின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.