’சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாம போகமாட்டேன்’ - அடுத்தாண்டு ஐபிஎல்-இல் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு தோனி பதில்!
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் 68-வது லீக் போட்டி மும்பை பிரபோர்னே மைதானத்தில் நடைபெற்று வருகிரது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அப்போது வர்ணனையாளர் இயான் பிஷப் அடுத்த வருடம் உங்களை சென்னை அணியில் பார்க்க முடியுமா என தோனியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சற்றும் தயங்காமல் பதில் அளித்த தோனி, "நிச்சயமாக , அதற்கு மிகவும் எளிய காரணம் தான் உள்ளது. இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது.
மும்பையில் எனக்கு ஒரு அணியாகவும் தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்.அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம்.
இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
தோனியின் இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.