ஐபிஎல் தொடருக்காக தயாரான தோனிக்கு தடை - புலம்பும் ரசிகர்கள்
தோனி நடித்த ஐபிஎல் விளம்பரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியாவில் 15வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முன்னணி அணிகள் எல்லாம் சொதப்பி, எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளன.
இதனிடையே ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்த தொடர் தொடங்கும் முன் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்து விட்டு விலகினார். இதனால் சென்னை அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் சென்னை அணி எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்க தவறாது என்பதற்காக வழக்கம்போல இந்தாண்டும் தோனி நடித்த விளம்பர படம் அந்த அணி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ரஜினி ஸ்டைலில் தோனி தோன்றி இருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். அந்த விளம்பரத்தில் தோனி ஓட்டி வரும் பேருந்து ஒன்று கடையில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் போட்டியை காண நிற்கும்.
இதனால் அங்கு மற்ற வானங்களும் நிற்கும் நிலை ஏற்பட்டு டிராபிக் ஜாம் ஆகும். அப்போது அங்கு வரும் டிராபிக் போலீஸ் இதுகுறித்து தோனியிடம் கேட்பார். அதற்கு அவர் சூப்பர் ஓவர் போகுதுல்ல என்று சொன்னதும் போலீஸ் அங்கிருந்து சென்று விடுவார். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளை மீறும் வண்ணம் இந்த வீடியோ இருப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விளம்பரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.