டிடிவி தினகரன் - எஸ்.டி.பி.ஐ கூட்டணி உறுதி: ஆறு இடங்கள் ஒதுக்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு திமுக, அதிமுக கூட்டணி தாண்டி மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலும் கூட்டணி உருவாகி தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன. திமுக கிட்டத்தட்ட தன்னுடைய அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கிவிட்ட நிலையில் அதிமுக இறுதிகட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது.
நாளை முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி, வேட்பாளரை இறுதி செய்யும் முடிவில் அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் திமுக உடனும் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.
இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் எஸ்.டி.பி.ஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 18 இடங்கள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்.டி.பி.ஐ கூட்டணி இறுதி செய்துள்ளது. அவர்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம். pic.twitter.com/PG7z5tRnN0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
இதனை டிடிவி தினகரன் உறுதி செய்தார். இது தொடர்பாக பேசிய எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள், ”தமிழகத்தில் திமுக மட்டுமே பாஜகவை எதிர்க்கும் கூட்டணி கிடையாது. திமுகவும் கடந்த காலங்களில் பாஜக உடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து இருக்கிறது. அமமுகவும் பாஜக எதிர்ப்பில் உருவான இயக்கம் தான்” என்றனர்