சசிகலா தமிழ்நாடு வருகையால் அமைச்சர்களுக்கு பதற்றம்: டிடிவி தினகரன் அதிரடி
சசிகலாவை மகிழ்ச்சியோடு அனைவரும் வரவேற்க தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டுகள் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த ஜனவரி 31 -ம் தேதி மருத்துவமனையில் இருந்தும் விடுதலையானார். இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் புறநகர் பகுதியில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சென்னை திரும்ப சசிகலா திட்டமிட்டார்.
முதலில் அவர் 7-ம் தேதி வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அஷ்டமி, நவமி வருவதால், அவரது பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அவரது அண்ணி இளவரசியும் நேற்றுதான் சிறையில் இருந்து விடுதலையானார். இதனால், அவர்கள் இருவரும் இணைந்து சென்னை வர திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர்கள் நேராக, சென்னை மெரினா கடைற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அப்போது அவர்கள் பேரணியாகவும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பதில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதில், தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள்.
தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. 1/5
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 6, 2021
அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு,அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.