சசிகலா அதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல்துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்
பெங்களுரிலிருந்து இன்று தமிழகம் நோக்கி புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி தாங்கிய காரில் பயணித்தார். தமிழக எல்லைக்குள் சசிகலா நுழைந்தபோது அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிமுக உறுப்பினர் காரில் பயணிக்கத் தொடங்கினார்.
அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிப்பது ஏன் என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இன்று காலை 7.15 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா, பின்னர் தமிழகம் கிளம்பினார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து டிஜிபியிடம் அதிமுக அமைச்சர்கள் புகாரளித்தனர். இருந்தாலும் சசிகலா சென்னை கிளம்பிய காரில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது.
இதனிடையே சசிகலா பயணிக்கும் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றக்கோரி அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். தமிழக - கர்நாடக எல்லையில் தனது காரில் இருந்து இறங்கிய சசிகலா, அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ள நிர்வாகிக்கு சொந்தமான வேறொரு காரில் பயணித்தார்.
அதில், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவின் காரில் பொருத்தப்பட்டுள்ள கொடியை அகற்ற போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், நோட்டீஸ் தருவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
காவல்துறை பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறிய தினகரன், காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிக்கிறார்” என்றும் விளக்கம் அளித்தார்.