பழனிசாமி பச்சோந்தி.. நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வர் பதவியை வாங்கியிருப்பேன்- டிடிவி தினகரன்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இதனையடுத்து, உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது - திமுக ஆட்சிக்கு வருவோம் என மாயையை உருவாக்கி வருகிறார்கள்.
அப்படி எனில் தபால் ஓட்டு போடும் போலீஸுக்கு ஏன் பணம் தருகிறீர்கள். பட்டுவேட்டிக்கு கனவு கண்டபோது, கட்டியிருந்த கோவணத்தைக் காணவில்லை என வைரமுத்து சொன்னார். அதுபோல திமுக ஆட்சிக்கு வந்தால் கோவணம் கூட மிஞ்சாது. முதல்வர் பழனிசாமி ஆறு, ஏரியைத் தூர்வாரினாரோ இல்லையோ, கஜானாவை நன்றாகவே தூர் வாரி இருக்கிறார்.
ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாவம் பழனிசாமி, தாயாரை நினைத்து அழுகிறார். உங்களை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றாரே அவரும் ஒரு அம்மாதானே.
சசிகலா காலிலே விழுந்து கிடந்தாரே. சாதி பார்த்தா சசிகலா பதவி கொடுத்தாங்க. பழனிசாமி பாம்பு, பல்லி கிடையாது. அவர் ஒரு பச்சோந்தி. நான் நினைத்து இருந்தால் முதல்வர் பதவியை அன்றே என்னால் வாங்கியிருக்க முடியும்.
2001ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியபோதும், நான் நினைத்து இருந்தால் நானே முதல்வராகி இருப்பேன். எது வந்தாலும் நேர் வழியில் சென்று மக்கள் மூலம் வரட்டும் எனக் காத்திருப்பவன் நான் என்று பிரச்சார கூட்டத்தில் பேசினார்.