தருமபுரி நீர் நிலைகள், பொது சொத்துக்கள் மீட்க ஆணை!!
தர்மபுரி மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் பொது சொத்துக்கள் மீட்கப்பட வேண்டுமென தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு விரிவான பதில் மனுவை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், கோவில் மற்றும் பொது சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், பாப்பாரப்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பரம்பரை அறங்காவலர்களான 5 பேரின் துணையுடன் கோவில் சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்து தமிழக அரசு, இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்டோரிடம் 2014ஆம் ஆண்டு முதல் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு விரிவான பதில்
மனுவை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.