“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதம்
அவர் தனது ராஜநாமா கடிதத்தில் குறிப்பிடுகையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும்,தேச விரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவுமே இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்தில்," கல்விச் சீர்திருத்தங்களுக்காக கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இளைஞர்களின் அபிலாசைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளைத் தான் ஆழமாக மதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் தேசத்திற்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைக் சுட்டிக்காட்டினார்.
"இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்திய மத்திய அரசு, விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்ததுடன், தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியையும் அறிவித்தது. மேலும், அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை முழுமையாகக் கணினி வழியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது," என்று கூறியுள்ளார்.
சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி மறுதேர்வை நடத்துவதே தங்களின் முதன்மை நோக்கமாக இருந்ததாகக் கூறிய அவர், இதற்காக 'ஒருங்கிணைந்த அணுகுமுறை' பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும், குறிப்பாக மாவட்ட நிர்வாகங்களும் இதில் முக்கியப் பங்கு வகித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் ஜூன் 21, 2026 அன்று தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
முதல் நாளிலிருந்தே நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன்; சூழ்நிலையை விட்டு நான் ஒருபோதும் விலகவில்லை. 'தேர்வு மாஃபியாக்களால்' எந்தவொரு தகுதியான மாணவனின் திறமையும் பாழாகிவிடக் கூடாது என்பதிலும், எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்," என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜூலை 16 அன்று வெளியான நீட் முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாகவும், பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல தகுதியான மாணவர்கள் இதில் வெற்றி பெற்றதாகவும் ,இருப்பினும் பொறுப்பான பதவிகளில் உள்ள சில தனிநபர்கள் தடைகளை ஏற்படுத்தவும், மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றது தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக அரங்கேறி வரும் நிகழ்வுகள் தனக்கு வேதனை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், "இது எனது தனிப்பட்ட கவுரவம் சார்ந்த பிரச்சனை அல்ல. நாட்டின் இளைஞர் சக்தியே இந்த தேசத்தின் உண்மையான பலம். நாட்டின் இளைஞர்களை ஒருபோதும் குழப்ப வலையில் சிக்க விடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.
ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தேச விரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவும் நான் எனது ராஜினாமாவை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்.
எந்தவொரு இந்திய மாணவனின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகாமல் இருப்பதையும், குழந்தைகள் தங்கள் நேரத்தைப் படிப்பிற்காகச் செலவிட்டு தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதையும் உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2026