பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்: பதைபதைக்கும் சம்பவம்
தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அதிகாலை 3.30 மணி அளவில் தருமபுரி ரயில்நிலையம் வந்தடைய வேண்டும்.
ஆனால், சேலத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது தண்டவாளம் அருகிலிருந்த கற்களில் உரசியதில் இன்ஜின் மற்றும் அதற்கடுத்துள்ள 3 பெட்டிகளும் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், ரயிலிலிருந்த பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை 3:50 மணியளவில், ரயில் எண் 07390 கண்ணூர் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் பெங்களூரு பிரிவின் தோப்புரு - சிவாடி இடையே தடம் புரண்டது. முதலாவதாக, B1, B2 (3வது ஏசி), S6, S7, S8, S9, S10 (ஸ்லீப்பர்) பெட்டிகளில் திடீரென பாறாங்கற்கள் விழுந்ததே இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்றும்,
டிஆர்எம் பெங்களூரு ஸ்ரீ ஷ்யாம் சிங், மூத்த அதிகாரிகளின் பிரிவுக் குழுவுடன், விபத்து நிவாரண ரயில் (ஏஆர்டி) மற்றும் மருத்துவ உபகரண வேனுடன் அதிகாலை 4.45 மணிக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஈரோட்டில் இருந்து ஏஆர்டியுடன் டிஆர்எம் சேலம் குழுவினரும் அதிகாலை 5.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ரயிலிருந்த 2348 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். உயிர்ச்சேதம்/காயம் எதுவும் பதிவாகவில்லை. மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. பின்பக்க 7 பெட்டிகளின் பாதிப்பில்லாத பகுதி, பயணிகளுடன் சேலம் நோக்கி நகர்ந்து சிறப்பு ரயிலில் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு சென்றது.
இது தொப்பூரில் நிறுத்தப்படும். பயணிகளின் வசதிக்காக தொப்பூரில் 15 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் 5 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3 பெட்டிகளின் முன்பகுதி தருமபுரிக்கு மாற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.