வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி - தாயை கடத்தி சித்ரவதை செய்த கொடூரம்
காதலர்கள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் இளைஞரின் தாயை கடத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
காதல் ஜோடி
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகன் சுரேந்தர் (24), கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரது மகள் பவித்ரா (23).
இரு வேறு சமூகத்தை சேர்ந்த சுரேந்தரும், பவித்ராவும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் மாலை வீட்டை விட்டு சென்ற சுரேந்தர் காலை வரை வீடு திரும்பவில்லை.
கடத்தல்
அதேபோல் பவித்ராவும் வீடு திரும்பாத நிலையில், சுரேந்தர் தான் பவித்ராவை அழைத்து சென்றிருப்பார் என்ற கோபத்தில், பவித்ராவின் தந்தை தனது உறவினர்களுடன் சுரேந்தர் வீட்டுக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சுரேந்தரின் தந்தை செல்வத்திடம், பவித்ரா எங்கே என கேட்டு அடித்து சட்டையை கிழித்துள்ளனர். தடுக்க முயன்ற தாய் முருகம்மாளை அடித்து, கணவன் கண்முன்னே சேலையை இழுத்து, துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் சுரேந்தரின் தாய் முருகம்மாளை வீட்டில் இருந்து கடத்தி வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று சுரேந்தர் இருக்கும் இடத்தை சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி, அவரின் வாயில் மதுவை ஊற்றி, அரைநிர்வாணப்படுத்தி உள்ளனர்.
என் மகன் இருக்கும் இடம் எனக்கு தெரியாது என்னை விட்டு விடுங்கள் என முருகம்மாள் அவர்களிடம் கெஞ்சிய நிலையிலும் பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவோம் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கு
புகார் அளிக்கப்பட்டது தெரிந்த அந்த கும்பல், "இங்கு நடந்ததை காவல்துறையிடம் தெரிவித்தால், வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவோம். உன் மகன் எங்கு இருந்தாலும் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் அந்தப் பெண்ணையும் உன் மகனையும் கொலை செய்து விடுவோம், என மிரட்டி விட்டு முருகம்மாளை மொரப்பூர் சாலையில் விட்டுள்ளனர்.
முருகம்மாளை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மொரப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முருகாம்மாளை கொடுமை படுத்தியதாக பூபதி உள்ளிட்ட 20 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் காதல் ஜோடியான சுரேந்தர் - பவித்ராவை தேடி வருகின்றனர்.