சிறப்பாக நடைபெற்ற தருமபுரம் பட்டணப் பிரவேசம் - பல்லக்கை தூக்கிய அண்ணாமலை, ஹெச்.ராஜா
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவடத்தில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணப் பிரவேச நிகழ்ச்சி ஆகியவை வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11 ஆம் திருநாள் திருவிழாவான ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தர் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவிருந்த பட்டணப்பிரவேச நிகழ்ச்சி மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் இழிவான செயல் எனக் கூறி திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மயிலாடுதுறை கோட்டாசியர் தடை விதித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாஜக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. வைணவ சமயத்தைச் சேர்ந்த ஜீயர்களும் இந்த விவகாரத்தில் அரசுக் எதிராகக் குரல் கொடுக்க பிரச்சனை பெரிதாக தொடங்கியது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குன்றக்குடி ஆதினத்துடன், தருமபுர ஆதினத்தின் சார்பில் தம்புரான் சுவாமிகளும், மயிலம் ஆதினம் உள்ளிட்டவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதில் தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் மே 22 ஆம் தேதியான இன்று அதிகாலை முதலே பல்வேறு தடைகளை கடந்து பட்டணப் பிரவேசவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. . இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திரு ஆபரணங்கள் அணிந்துக் கொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கிராமிய கலை நிகழ்ச்சியோடு பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். அதேசமயம் மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பூர்ணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம்,செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சில விநாடிகள் பலக்கைத் தூக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.