தருமபுர ஆதீனத்துடன் தமிழக அமைச்சர் சேகர் பாபு திடீர் சந்திப்பு..!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம். ஆனால், மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதனையடுத்து, மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டார்.இதனால், பிரச்சினை பெரிதாக வெடித்தது.
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது.
தருமபுரம் ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம். எனது குருவான தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது, நடத்துவோம்.
உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினையால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றிருக்கிறார்.
இதற்கிடையில், அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாலை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பின்னர், தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர், 27,000 மரக்கன்றுகளை நடும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.