எனக்கு அந்த பொண்ணு சரியா வருமா? - தனுஷின் கேள்வியால் ஆடிப்போன இயக்குநர்
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் நடிகர் தனுஷ் பேசியதாக கூறப்படும் தகவல் ஒன்று ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் நடித்து வரும் நிலையில் ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகிய இருவருடனும் நடித்திருந்தார். இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீசானது.
இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அட்ராங்கி ரே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே சாரா அலிகான் பற்றி தனுஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
அதில் சாரா அலிகானுக்கு படத்தில் பெரிய கதாபாத்திரம், மேலும் ரொம்ப கஷ்டமான கதாபாத்திரம் என்பதால் அவரால் நடிக்க முடியுமா என்ற கேள்வி எனக்கு எழுந்தது. உடனடியாக ஆனந்த்ஜியிடம் சென்று சாரா இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார் என்று கேட்டேன். 3 படங்கள் என அவர் தெரிவிக்க இந்த கதாபாத்திரத்தில் சாரா நடிக்க முடியுமா? என நான் கேள்வியெழுப்பினேன்.
அதற்கு ஆனந்த் ஜி என் ஹீரோயின் சாராவால் நிச்சயம் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என தெரிவித்தார். பின்னர் சாரா நடித்ததை பார்த்து தான் அசந்ததாகவும் தனுஷ் கூறியுள்ளார். நடிப்பில் அசுரனான தனுஷூக்கு இப்படி ஒரு சந்தேகமா என்ற கேள்வி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.