நடிகர் தனுஷ் விவகாரம்.. ஃபெப்சி அமைப்புக்கு நடிகர் சங்கம் கண்டனம் - நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையே நடந்த பலகட்ட பேச்சு வார்த்தைகளில், ஃபெப்சி உட்பட அனைத்து தமிழ்த் திரையுலக தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளை, தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வழங்கியது.
நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் அவர்கள் விஷயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, தனுஷ் அவர்களின் படப்பிடிப்பும் தற்சமயம் நடைபெற்று வருகிறது.இதனிடையே திரு. தனுஷ் அவர்கள் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில்,
நேற்று (17.09.2024) திடீரென, திரு.தனுஷ் அவர்கள் தொடர்பாக விசாரிக்க ஒரு கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக ஃபெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.
கண்டனம்
ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது.
ஏனெனில், நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிபட நினைவுபடுத்துகிறோம்.
மேலும், ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும்
கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி
வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.