விமான நிலையத்தில் கதறி அழுத தமிழக தடகள வீராங்கனை: சோகத்தில் ரசிகர்கள்
ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்று திருச்சி விமான நிலையம் வந்த தனலட்சுமி தனது சகோதரியின் மறைவு செய்திக் கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 32வது ஒலிம்பிக் தொடரின் தடகளப் போட்டியில் தமிழகத்திலிருந்து ஆண்கள் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியன், கலப்பு பிரிவு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதனிடையே திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி டோக்கியோ சென்றிருந்தபோது அவரது சகோதரி கடந்த ஜூலை 12 ஆம் தேதி அன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் சகோதரி இறந்ததை தனலட்சுமியிடம் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர்.
இன்று விமான நிலையம் வந்த தனலட்சுமியிடம் தகவலை தெரிவித்த போது துக்கம் தாங்காமல் விமான நிலையத்திலேயே அவர் கதறி அழுதார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.