கள்ளச்சாராயம் விவகாரம்; ஒருத்தரையும் விடாதீங்க தேடி தேடி பிடியுங்கள் - எஸ்.பிகளுக்கு டிஜிபி அதிரடி உத்தரவு
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என்றும் குறிப்பாக வனப்பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
22 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் ,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதே போல கள்ளச்சாராய விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஜிபி அதிரடி உத்தரவு
தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மாவட்ட எஸ்பிக்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ’’மாவட்டத்தில் கள்ளச்சாராயம் எங்கேனும் விற்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இதுத் தொடர்பாக கூடுதல் தேடுதல் வேட்டை நடத்த வேண்டும். குறிப்பாக வனப்பகுதிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து கள்ளத்தனமாக மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு , மாவட்ட எஸ்.பிக்களுக்கு மட்டுமல்ல, மாநகர காவல் ஆணையர்கள், மதுவிலக்கு பிரிவு போலீஸார் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு சென்றுள்ளது.