மதுரை ரயில் விபத்து சதி வேலை காரணமா? டி.ஜி.பி பரபரப்பு விளக்கம்
மதுரையில் ரயில் விபத்து ஏற்பட்டதன் பின்னணியில் சதி வேலைகள் ஏதேனும் உள்ளதா? என்பதற்கு தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.வனிதா விளக்கமளித்துள்ளார்.
மதுரை ரயில் விபத்து
மதுரை ரயில் நிலையம் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் அதிகாலை டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்த போது கேஸ் லீக்காகி தீப்பிடித்து எரிந்துள்ளது. பொருட்கள் திருடு போவதை தடுப்பதற்காக ரயில் பெட்டியை பூட்டியும் ஜன்னல்களை மூடியும் வைத்திருந்திருக்கிறார்கள்.
இதனால் தீப்பிடித்தவுடன் பயணிகளால் ரயிலில் இருந்து வெளியேற முடியாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது.. இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சதி திட்டமா?
இந்நிலையில், இந்த தீடீர் விபத்திற்கு பின்னணியில் ஏதேனும் சதி வேலைகள் உள்ளனவா? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.வனிதா பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 174-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு, தடயவியல் நிபுணர்கள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் ரெயில் பெட்டியில் தடயங்களை சேகரித்துள்ளனர் என தெரிவித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம் விபத்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி, இதில் எந்த சதிச்செயலும், யாருக்கும் தொடர்போ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது என தகவல் அளித்துள்ளார்.