திருப்பதி வரும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு - இது கட்டாயம்

tiupati covid certificate
By Petchi Avudaiappan Dec 24, 2021 10:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள், இதர வேலையாக திருமலைக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றுடன் வர வேண்டும், என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ள செய்தி அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், அதில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

பல பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவதால், அலிபிரி சோதனைச் சாவடியிலேயே அந்தப் பக்தர்களை தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் கண்டு பிடித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமலேேய திரும்பி சொந்த ஊர்களுக்குச் சென்று விடுகின்றனர்.

சமீப காலமாக கொரோனா தொற்று 3-வது அலையாக ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இருப்பினும், பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

மேற்கண்ட சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்லவும், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் தங்களின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.