தக்காளி விலை குறையணும் - அம்மனுக்கு 508 தக்காளி மாலை அணிவித்து சிறப்பு பூஜை..!
தொடர்ந்து உயர்ந்து வரும் தக்காளி விலை குறைந்திட வேண்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தக்காளிகளாலான சிறப்பு மாலையை அணிவித்து பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
அம்மனுக்கு சிறப்பு பூஜை
சமையலில் அத்தியாவசியமான காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. குறிப்பாக அண்மைக்காலமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
ஒரு கிலோ தக்காளியின் விலை 200 ரூபாயை தொட்டுள்ள நிலையில், சாமானியர்கள் பலரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை இது பெரும் கேள்விக்குறியாக மாற்றியுள்ள நிலையில், தக்காளியின் விலை குறையவேண்டும் என 508 தக்காளிகளாலான சிறப்பு மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பகுதியை அடுத்த காருக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவை பெற வேண்டி சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற்றது.
இந்த பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கும், மதுர வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகளை கொண்ட மாலை அணிவிக்கப்பட்டு பூஜை மேற்கொள்ளப்பட்டது.
அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்ட தக்காளி நாளை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு பூஜையில், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.