இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான அந்த தொடரை அழித்து விடுங்கள் - மனோஜ் திவாரி வேதனை!
ரஞ்சி கோப்பைக்கு இப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி வேதனை தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை
உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டில் ஓங்கி நிற்பதற்கு ரஞ்சி கோப்பை தொடர்தான் ஆழமான விதையாக பார்க்கப்படுகிறது. ரஞ்சி கோப்பையிலிருந்து சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பல ஜாம்பவான்கள் தேர்வாகி இந்தியாவுக்காக பல சாதனைகள் படைத்தனர்.
சமீப காலமாக ஐ.பி.எல். தொடரில் அசத்தும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வுக் குழுவினர் தேர்வு செய்கின்றனர். ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடும் வீரர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.
வேதனை
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக கருதப்படும் ரஞ்சி கோப்பைக்கு இப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இந்திய கிரிக்கெட்டின் காலண்டரில் அடுத்த சீசனில் இருந்து ரஞ்சிக் கோப்பை அழிக்கப்பட வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க கவுரவமான தொடரை காப்பாற்றுவதற்கு பல்வேறு அம்சங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது.
ஏனெனில் இந்த தொடர் தன்னுடைய அழகையும் முக்கியத்துவத்தையும் இழந்து வருகிறது. அதை பார்ப்பது முற்றிலும் விரக்தியை ஏற்படுத்துகிறது. எனவே அதை நிறுத்தி அழித்து விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.