வறுமையின் பிட்டியில் ஆஃப்கான் : பசியினை போக்க குழந்தைகளை விற்கும் கொடூரம்!
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்று உள்ள நிலையில் அங்கே கடும் உணவுப் பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆஃப்கான் மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளைச் சந்தையில் விற்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஆஃப்கானிஸ்தானின் செய்தி சேனலான டோலோ நியூஸ் உறுதிபடுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சுமார் நான்கு கோடி மக்களில் இரண்டரை கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கிறார்கள்
. இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடிக்கு அதிகரிக்க வெறும் இரண்டே மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. காரணம் தாலிபான்கள் என்கிறது WFP எனப்படும் உலக உணவு அமைப்பு.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்ற நாடுகளையே நம்பியிருந்த நிலையில், தற்போது தாலிபான்களின் வரவால் சரிந்திருக்கிறது. அஷ்ரஃப் கனி ஆட்சியை விட்டு சென்ற பின்னர் அரசு பணியாளர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆப்கானின் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை அண்மையில் தொடங்கியுள்ளது ஆஃப்கானிஸ்தான். இதன்படி பாகிஸ்தான் உடனான வர்த்தகத்துக்கான ஸ்பின் போல்தக் நுழைவுவாயிலைத் தற்போது திறந்துவிட்டுள்ளது ஆஃப்கானிஸ்தான்.