சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்த துணைமுதல்வரின் மகன்
சசிகலா நலம்பெற வாழ்த்து தெரிவித்த துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயப்ரதீப் செயல் அரசியல் வட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா அவர்கள் கடந்த ஜனவரி 27ம் தேதியோடு 4 ஆண்டு சிறைத்தண்டனை முடிவடைந்து விடுதலையானார். ஆனால் அவர் விடுதலை ஆவதற்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சசிகலாவின் விடுதலையை அமமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சசிகலா பூரணமாக குணமடைந்து வர வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப், சசிகலா நலம் பெற்று வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சசிகலா விரைவில் குணமடைந்து இனிவரும் காலங்களில் அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.