மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மீண்டும் டெங்கு வைரஸ் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. தற்போது மட்டும் தமிழகத்தில் 511 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒருவகை காய்ச்சல்.
இது ஏற்பட்டாலே உயிரிழப்பு ஏற்படும் என்பது தவறான கருத்தாகும். டெங்கு காய்ச்சலை முழுமையாக குணப்படுத்த முடியும். ஏடிஸ் என்ற கொசுவால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகி, பகலில் மட்டுமே கடிக்கக் கூடியது என்றும், காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.