டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை.
இதன் அடுத்த கட்டமாக இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்துள்ளனர் டெல்லியின் சிங்கு எல்லையில் இருந்து தில்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்துள்ளனர்.
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்கு வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே தில்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.